வணிகர் சங்கங்களின் கடையடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

2001 Views
வணிகர் சங்கங்களின் கடையடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!
kadai-adaippu
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
தமிழகத்திற்கு காவிரி தண்ணீரைத் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் நமது நெஞ்சங்களை பிழியச் செய்துள்ளன. தனிநபர் தாக்குதல்கள் தொடங்கி வணிக நிறுவனங்கள், தமிழகப் பதிவெண் கொண்ட பேரூந்துகள், லாரிகள், கார்கள் முதலிய வாகனங்களும் எரிக்கப்பட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்தி தமிழர்களின் வாழ்வுரிமைக் காக்க கர்நாடக அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்காதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்திற்கு நியாயமாக வரவேண்டிய அளவுகூட திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை. இருப்பினும் இந்த உத்தரவைக் கூட சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு கன்னட தீவிரவாத அமைப்புகள் தமிழர்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளன.  1991ல் காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவு வெளிவந்த உடன் நடைபெற்றது போன்று தமிழர்கள் மற்றும் அவர் தம் உடமைகள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசு இரு மாநிலங்களுக்குமிடையே நடைபெறும் இந்தப் பிரச்சனையை கண்மூடி வேடிக்கைப் பார்க்கும் கையாலாகாத அரசாக விளங்குகின்றது. நடுநிலை வகிக்க வேண்டிய மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கர்நாடகம் பக்கமே நியாயமுள்ளது என்று பேசி கலவரத்தைத் தூண்டி வருகின்றார்கள்.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் காவிரியின் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடகத்தில் தொடர்ந்து தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களைக் கண்டித்தும், சொத்துகளை இழந்த தமிழர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள  வணிகர் சங்கங்கள் வரும் 16ம் தேதி நடத்தவுள்ள கடையடைப்பில் மனிதநேய மக்கள் கட்சி முழுமையாகப் பங்கேற்கும். தமிழர்களின் வாழ்வுரிமை தொடர்பான இந்தப் போராட்டத்தில் முழுமையாகப் பங்கு கொள்ளும்படி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள் விடுக்கின்றது.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக
Leave a Reply