ராஜஸ்தானில் சென்னை காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி வீரமரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

ராஜஸ்தானில் சென்னை காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி வீரமரணம்!
மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!
inspector
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
சென்னையில் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் சென்ற சென்னை மாநகர காவல்துறையின் தனிப்படை கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தபோது ராம்புர்கலான் என்ற கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் துன்பத்தையும்  அளிக்கிறது.
கொள்ளையர்களைப் பிடிக்க முற்பட்டபோது வீரமரணம் அடைந்துள்ள பெரிய பாண்டியின் குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகுந்த பொறுப்புணர்வுடன் கடமையாற்றிய ஒரு நேர்மையான காவல் அதிகாரியாக பணியாற்றியவர் ஆய்வாளர் பெரிய பாண்டி. அவரது அகால மரணம் தமிழகக் காவல்துறைக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.
ஆய்வாளர் பெரிய பாண்டியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணமும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மற்றொரு காவல் ஆய்வாளர் முனிசேகருக்கு உயர்தர மருத்துவ சிகிக்சையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். ஆய்வாளர் முனிசேகர் விரைவில் முழுமையாக குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது என்பதற்கு உதாரணமாக நமது ஆய்வாளர் பெரிய பாண்டியின் வீரமரணம் அமைந்துள்ளது. பசு குண்டர்களால் பெஹ்லு கான் என்ற பால் பண்ணை உரிமையாளர் தொடங்கி கடந்து வாரம் லவ் ஜிஹாத் என்ற பெயரில் அப்ரசலுல் கான் என்ற 47 வயது கூலித் தொழிலாளி வரை தொடர்ந்து வன்முறைக் கும்பல்களால் ராஜஸ்தான் மாநிலத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதன் உச்சபட்சமாக தனது கடமையை நிறைவேற்றிய ஆய்வாளர் பெரிய பாண்டி கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர் மாவட்டத்திலிருந்து 50 பசு, காளை மற்றும் கன்றுக் குட்டிகளை சந்தையில் வாங்கி 5 லாரிகளில் உரிய ஆவணங்களுடன் தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்த போது அவர்களது வாகனத்தை தீ வைத்துக் கொளுத்த வன்முறைக் கும்பல் முயன்றது. இதில் தமிழக கால்நடைத் துறையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் என். அரவிந்த்ராஜ் மற்றும் அவரது உதவியாளர்கள் பாலமுருகன் மற்றும் கருப்பைய்யா ஆகியோர் மிகக் கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழக காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி சுட்டுக் கொல்லப்படும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை படுமோசமாக நிர்வகிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை ஆளும் பாஜக அரசையும் மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வீரமரணம் அடைந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி மற்றும் காயம் அடைந்துள்ள காவல் ஆய்வாளர் முனிசேகர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ராஜஸ்தான் மாநில அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோருகிறேன்.

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply