மூத்த பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!

மூத்த பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை:
மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!
gowri
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பெண் பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் அவர்கள் பெங்களூருவில் நேற்றைய தினம் பாசிச வெறியர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
துணிச்சல் மிக்க இதழியலாளராகவும், மனிதஉரிமைப் போராளியாகவும், தீரமிக்க செயல்பாட்டாளராகவும் கவுரி லங்கேஷ் விளங்கினார். தனக்கு மனதில் பட்டதை எவ்வித தயக்கமுமின்றி துணிச்சலாக எடுத்துரைத்து வந்தவர் கவுரி. இதற்காக அவர் சிறைத் தண்டனை பெற்ற போதிலும் அதனைத் தயக்கமின்றி எதிர்கொண்டவர்.
மனுவாதம், மதவாதம், சாதியவாதம் போன்றவற்றை எதிர்த்து தனது கருத்துக்களைத் துணிச்சலாக எழுதியும், பேசியும் வந்தவர் கவுரி  லங்கேஷ். சங்பரிவாரின் அரசியல் எவ்வளவு கொடூரமானது என்பதை அவர் மிகத் துல்லியமாக மக்களுக்கு எடுத்துரைத்து வந்த நிலையில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவை சந்தித்து 2015 ஆகஸ்டில் கொல்லப்பட்ட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கியின் கொலையாளிகளைக் கண்டுபிடித்து விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்த நிலையில் கவுரி கொல்லப்பட்டுள்ளார். பெங்களுருவில் விநாயகர் கரைப்பு நிகழ்ச்சி நடைபெற்ற அதே நாளில் இந்தப் படுகொலை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மனிதநேய மிக்க சிந்தனையாளர்களான நாராயண் டப்லோகர், கோவிந்த் பன்சாரே மற்றும் கல்புர்கி ஆகியோர் கொல்லப்பட்ட அதே பாணியில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள், துப்பாக்கியால் கவுரியை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற சில தினங்களில் முகநூலில் தன் கருத்துக்களைப் பதிவு செய்த புனே பொறியாளர் முஹ்சீன் ஷேக் தொடங்கி கவுரி லங்கேஷ் வரை இந்தப் படுகொலைகள் நீண்டு வருகின்றன.
சங் பரிவாரை சதிகளை தம் எழுத்துக்களால் அம்பலப்படுத்தி வருபவர்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டு வருவது நாட்டில் சகிப்பின்மை பெருமளவில் வளர்ந்து வருவதின் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
கவுரி லங்கேஷை படுகொலை செய்தவர்களையும், அதற்கு மூளையாக செயல்பட்டவர்களையும் உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
எம்.எம்.கல்புர்கி அவர்களின் நினைவேந்தல் கூட்டம் 20 மாதங்களுக்கு முன்பு தண்டியில் நடைபெற்ற போது உரையாற்றிய காந்தியடிகளின் பேரன் ராஜ்மோகன் காந்தி அவர்கள், “கஸ்தூரிபாய் அவர்களிடமிருந்தே காந்தியடிகள் எதற்கு அஞ்சாமல் இருக்கும் மனவலிமையைப் பெற்றார் என்று குறிப்பிட்டு விட்டு, அச்சமில்லாமல் தொடர்ந்து நாம் பணியாற்றுவதே பாசிசத்தை எதிராகப் போராடுவோம்” என்று குறிப்பிட்டார்.
இன்று முற்போக்கு சிந்தனையாளர்களைப் படுகொலை செய்யத் துணிந்துள்ள மதவாத பாசிசத்திற்கு எதிராக கவுரி லங்கேஷ் போன்ற வீரப் போராளிகளை போல் அச்சமின்றி துணிச்சலாக எதிர்கொள்ள உறுதி எடுத்துக் கொள்வோமாக.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply