முத்தலாக் மசோதா: அரசியலமைப்பிற்கு களங்கம்!

1384 Views
முத்தலாக் மசோதா: அரசியலமைப்பிற்கு களங்கம்!
25552056_1950308651651880_6920024811975477530_n
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
முத்தலாக்கிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைச்) சட்டம் 2017 நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தினம் அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் மத உரிமைகளுக்கு களங்கம் கற்பித்த தினமாக விளங்குகின்றது.
முத்தலாக் என்ற பெயரில் முஸ்லிம் பெண்கள் மீது தனக்கு கரிசனம் உள்ளது என்ற கயமை நாடகம் ஆடி திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அவசரக் கோலத்தில் மக்களவையில் இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
சிறுபான்மை முஸ்லிம்களை வஞ்சிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட போது அதனை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வாக்களிக்காதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அஇஅதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அன்வர் ராஜா அவர்கள் இந்த சட்டத்தை எதிர்த்து ஆற்றிய சிறப்பான உரையை வரவேற்கிறோம். அதே நேரத்தில் மசோதா குறித்த வாக்கெடுப்பில் அஇஅதிமுக அதனை எதிர்த்து வாக்களிக்காததைக் கண்டிக்கிறோம்.
இந்த சட்ட முன்வடிவு மாநிலங்கவையில் அறிமுகப்படுத்தும் போது காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் நலனில் அக்கறையுள்ள கட்சிகள் இச்சட்டத்தை கடுமையாக எதிர்ப்பதுடன் இச்சட்ட முன்வடிவு குறித்த வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களித்து அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளை காக்கும் கடமையை செவ்வனே ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேநேரத்தில் திமுக செயல் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த முத்தலாக் மசோதாவை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கின்றேன்.
 கடந்த ஆகஸ்ட் 17,2017 அன்று உச்சநீதிமன்றம் முத்தலாக் குறித்து அளித்த தீர்ப்பிற்கு நேர் முரணாக இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முத்தலாக் குறித்த வழக்கை விசாரித்த ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வில் மூன்று நீதிபதிகள் முத்தலாக் செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பு வழங்கினர். இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டம், முத்தலாக் முறையில் திருமணத்தை முறிக்கும் ஒருவருக்கு சிறைத் தண்டனை என்று விதிமுறை முறையில் செய்யப்படும் விவாகரத்து செல்லத்தக்கது என்று மறைமுகமாக ஒப்புக் கொள்ளும் வகையில் இச்சட்டம் அமைந்துள்ளது.
 இந்த சட்ட முன்வடிவின் 2(பி) பிரிவில் இடம் பெற்றுள்ள ‘தலாக்’ பதத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வரைவிலக்கணம் தலாக்-இ-பித்அத் (முத்தலாக்) முறையைத் தாண்டிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் தலாக்-இ-பித்அத் ஐ மட்டுமே சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டது. இந்த சட்டமுன்வடிவு அளித்துள்ள  வரைவிலக்கணக்கத்தின்படி தலாக்- இ -பாயின் ஒரு முறைச் சொல்லப்படும் தலாக் முறையைக் கூட உள்ளடக்கப்படக் கூடும். உச்சநீதிமன்றம் தலாக்-இ-பாயினை தடை செய்யவில்லை.  ஆனால் இச்சட்ட முன்வடிவின் பிரிவு 2(பி) மற்றும் பிரிவு 3ஐ சேர்த்து படிக்கும் போது தலாக்-இ-பாயின் கூட செல்லத்தக்கது அல்ல என்றும் அது சட்டவிரோதம் என்றும் ஆகும் வகையில் உள்ளது. ஏனெனில் “இது போன்ற வடிவில் உடனடியாகவும் மீட்க இயலாத முறையிலும் உள்ள தலாக்” என்ற சொற்றொடர் உச்சநீதிமன்றம் தடை செய்யாத தலாக் இ பாயினிற்கு பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தலாக் சொல்வதை அடையாளம் காணப்படும் குற்றம் (Cognizable Offence) என்று இச்சட்டம் வரையறுத்துள்ளது. இதன் காரணமாக எவரும் காவல் நிலையம் சென்று இன்னார் முத்தலாக் சொல்லிவிட்டார் என்று குறிப்பிட்டு அந்த முஸ்லிமை சிறையில் அடைக்க வழிவகுக்கும் வகையில் இச்சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமுன்வடிவின் விளைவுகள் பொதுவாக அனைத்து முஸ்லிம் பெண்களின் நலன்களுக்கு முரணாக உள்ளது. மேலும் விவாகரத்துப் பெற்ற பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த சட்டமுன்வடிவு இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தின் கோட்பாடுகளுக்கு எதிராகவும் இருப்பதுடன் முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 இந்தச் சட்டம் பொதுவாக முஸ்லிம்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதாலும் முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இருப்பதாலும் அரசியலமைப்புச் சட்டத்தின் 25ம் பிரிவு அளித்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளாதாலும் மோடி அரசு கொண்டு வந்துள்ள இச் சட்டம் முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கு நேர் எதிரான சட்டம் ஆகும்; முஸ்லிம் பெண்களின் குழப்பங்களையும் கவலைகளையும் சிரமங்களையும் அதிகப்படுத்துகின்ற சட்டம் ஆகும். மேலும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களில் வெளிப்படையான தலையீடாகத்தான் இந்தச் சட்டம் இருக்கின்றது.  அதிக அளவில் முஸ்லிம்களை சிறையில் அடைக்க வேண்டும் என்ற பாஜகவின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் இச்சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலையீடு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு நேர் எதிரானதாகவும் அமைந்துள்ளது.
இச்சட்டம் உடனடியாக திரும்ப பெறப்பட வேண்டும் என்று கோருகிறோம். தொடர்ந்து நேச அமைப்புகளுடன் இணைந்து இச்சட்டத்திற்கு எதிரான எல்லா வகையான போராட்டங்களிலும் மனிதநேய மக்கள் கட்சி ஈடுபடும்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply