மியான்மரில் முஸ்லிம்கள் இனப் படுகொலை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

684 Views
மியான்மரில் முஸ்லிம்கள் இனப் படுகொலை!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
மியான்மருடனான தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டுகோள்!!
MHJ (2)
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
மியான்மர் (பர்மா) நாட்டில் ரோஹிங்கிய பகுதியில் கி.பி. 1784 முதல் வாழ்ந்து வரும் முஸ்லிம்களை பாசிச வெறியர்கள் கொலை செய்தும், அவர்களின் வீடுகளை தீவைத்து எரித்தும் கொடூரமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அந்நாட்டு அரசும், காவல்துறையும் வேடிக்கைப் பார்த்து வருகிறது. அதேபோல் உலக நாடுகளும் இப்படுகொலை குறித்து மௌனம் காத்துவருகின்றனர்.
 ரோஹிங்கியா பகுதிகளில் பல முஸ்லிம் கிராமங்களை இராணுவம் நெருப்பிட்டு கொளுத்தியுள்ளது. அந்நாட்டு அரசாலும், புத்தமத்த்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளாலும் திட்டமிட்டு நடத்தப்படும் இனப் பேரழிவுகளுக்கு (Genocide)  எதிராக எழும் எதிர்ப்புக் குரல்களை மியான்மர் அரசு தட்டிக்கழித்தும் வருகிறது. மியான்மர் அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
 சர்வதேச பொது மன்னிப்பு நிறுவனமான அம்னெஸ்டி இன்டர்நேசனலின் தென்கிழக்கு ஆசிய இயக்குனர் ரபின்டி ஜாமீன் தனது அறிக்கையில் திட்டமிட்டு ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். சாதாரண குடிமக்கள் மீது விரிவான திட்டமிட்ட முறையில் நடைபெறும் இந்த தாக்குதல் மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக (Crime against humanity) கருதப்படும் நிலையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் ஐ.நா.சபையின் மனிதஉரிமை நிறுவனம், சர்வதேச மக்கள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள் இந்த படுபாதக செயல்களை கண்டித்துவருகின்றன.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் ஆட்சியில் இதுபோன்ற இனப்படுகொலைகள் நடந்துவருவது வெட்கக்கேடாகும். இதற்குமுன் ஆட்சியில் இருந்த இராணுவ அரசு ஆட்சிசெய்த போதுகூட முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படவில்லை. ஆனால் ஆங் சாங் சூகியின் ஆட்சியில் முஸ்லிம்கள் கால்நடைகளைப் போன்று நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்படுகின்றனர்.
மியான்மரில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் மக்களை ஒரங்கட்ட ஆங் சாங் சூகி மும்முரமாக செயல்பட்டுவருகிறார் என்பதையே இதுபோன்ற இனப்படுகொலைகள் வெட்டவெளிச்சமாக காட்டுகின்றன.
மியான்மர் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அத்துமீறல்களையும், உயிர் வாழும் அடிப்படை உரிமையையும் பறிக்கு பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதிகளின் தாக்குதல்களையும் இனியும் உலக நாடுகள் வேடிக்கைப் பார்க்கக்கூடாது.
 ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவரும் புத்த வெறியர்களையும், அதற்கு துணை நிற்கும் மியான்மர் அரசையும் உலக நாடுகள் வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 மத்திய அரசும் இந்த இனப்படுகொலையை தடுக்கும் வகையில் மியான்மருடனான தூதரக உறவை துண்டித்து டெல்லியில் உள்ள மியான்மர் தூதரை வெளியேற்ற வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கு புகார் மனுவும் அனுப்பப்படுகிறது.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply