மாற்றுக் கருத்துக் கொண்டோரை ஒடுக்கும் நெல்லை காவல்துறை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மாற்றுக் கருத்துக் கொண்டோரை ஒடுக்கும் நெல்லை காவல்துறை!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
22688113_1194579960686576_5440787670266251932_n
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டோர், அரசை விமர்சனம் செய்வோர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரை ஒடுக்கும் நடவடிக்கையில் நெல்லைக் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வட்டியால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக கேலிச் சித்திரம் வரைந்த கார்டூனிஸ்ட் பாலாவை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதேபோல் நெல்லையில் கூடங்குளம் தொடர்பான வழக்குகளில் வாதாடி வந்த வழக்கறிஞர் ராஜரத்தினம் அவர்களை வீடு புகுந்து தூக்கிக் கொண்டுபோய் அவரை சித்திரவதை செய்து பின்பு மக்களின் எதிர்ப்பு காரணமாக விடுவித்ததும், சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தமிழக அரசிற்கு எதிராக கருத்துக்களைத் தெரிவிக்கும் நபர்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கான எடுத்துக்காட்டாகும்.
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மீது ஒடுக்குமுறைகளையும் வன்முறைகளையும் ஏவும் நிலை இருந்துவந்த நிலையில் தற்போது எடப்பாடி தலைமையிலான தமிழக அரசும் அதேபோன்ற ஒடுக்குமுறை களைக் காவல்துறை மூலம் ஏவிவிட்டுள்ளது. தமிழக அரசிற்கு எதிராகப் பேசி வருபவர்கள் மீதும், எழுதிவருபவர்கள் மீதும் இதுபோன்ற அடுக்குமுறை ஏவுவதனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம்¢ அளித்துள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக நெல்லை காவல்துறை செயல்பட்டு வருகிறது.
எனவே, தமிழக காவல்துறை தலைமை இயக்குநரும், தமிழக அரசும் நெல்லை காவல்துறையின் இதுபோன்ற அடாவடிப் போக்கை தடுத்து நிறுத்துவதுடன், கார்டூனிட் பாலா உள்ளிட்டவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply