மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமுமுக வலியுறுத்தல்!

மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமுமுக வலியுறுத்தல்!
jsr
தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
கடந்த ஒரு மாத கால தேர்தல் பரப்புரையின் போது தொடர்ந்து மூட்டை மூட்டையாக பணம் பிடிபட்டு வந்ததும், பல்வேறு வகையில் ஓட்டுக்காக மக்களை விலைபேசும் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததாகவும் செய்திகள் வந்த நிலையில் இந்த வெற்றி ஆளும் கட்சிக்கு கிடைத்திருக்கிறது. தற்போதைய வெற்றிக்கு ஆளும் கட்சி தன்னுடைய முழு பணபலத்தையும் பயன்படுத்தியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் தேர்தல் முடிவுகளை ஏற்று மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்தகால சட்டசபை நிகழ்வுகளில் ஆளும்கட்சி செயல்பட்ட விதத்தைக் காணும்போது அதை எதிர்கொள்ளும் விதத்தில் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக தி.மு.க. சட்டசபைக்கு செல்கிறது என்ற மன ஆறுதல் ஏற்படுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிகளுக்கும், குறிப்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தேர்தல் களத்தில் அயராது பாடுபட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஆற்றல்மிகு செயல்வீரர்களுக்கும், வாக்களித்த நல் இதயங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தல் பரப்புரையில் கூறியபடி தமிழக மக்களை வாட்டி வதைக்கும் கொடும் தீமையான மதுவை ஒழித்துக்கட்ட உரிய நடவடிக்கையை எடுக்கும்படியும், தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்றுமாறும் தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்
ஜே.எஸ்.ரிபாயீ
தலைவர், தமுமுக
Leave a Reply