மதுவிலக்கு கோரியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

1403 Views
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை:
MHJ-2
கடந்த மாதம் திருச்சியில் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் சார்பாக மதுவிலக்கு கோரி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு கோரி பேசியதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆறு பேர் மீது ஒரு மாதத்திற்குப் பின் திருச்சி காவல்துறையினர் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் இந்தச் செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மது அருந்துபவர்கள் நோயினால் பாதிக்கப்படக்கூடாது என்றும், சமுதாயத்தின் மீதான அக்கறையாலும் கண் முன்னால் இளைஞர்கள் மரணமடைவதை சகிக்க முடியாத காரணத்தாலும், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், தன்னார்வல அமைப்புகள் ஆகியவை மதுவிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வருகின்றனர். இந்தப் போராட்டக் கோரிக்கையைப் பரிசீலிக்காமல், கோரிக்கை வைத்தவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவுசெய்து அடக்க முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாடகர் கோவனைத் தொடர்ந்து இந்த ஆறு பேர் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்திருப்பது தற்போதைய அதிமுக அரசுக்கு மதுவினால் மக்கள் பாழ்படுவதை தடுக்க கிஞ்சிற்றும் அக்கறை இல்லை என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
மதுவிலக்கிற்காக ஜனநாயக வழியில் போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி ஒடுக்க நினைப்பது ஜனநாயக படுகொலைக்கு சமமாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.
எனவே, ஆறு பேர் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என மனிதநேய மக்கள் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
(எம்.எச்.ஜவாஹிருல்லா)
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map