போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமைகளைத் தமிழக அரசு நசுக்கக்கூடாது! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமைகளைத் தமிழக அரசு நசுக்கக்கூடாது! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
mhj new
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் நிலுவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பேச்சுவார்த்தையில் அரசுத் தரப்பு சில நிர்பந்தங்களை திணித்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து போக்குவரத்து சங்கங்கள் நேற்று இரவு முதலே காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டு விட்டது.
போக்குவரத்து ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவ, மாணவிகள், முதியோர் எனப் பலதரப்பினர் பெரிதும் அவதிக்கும் சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.
  போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களைக் கருத்தில் கொண்டும், காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும் போக்குவரத்து ஊழியர்களின்  நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தமிழக அரசு நடவடிக்கை வேண்டுமே தவிர அதற்கு மாற்றாக தற்காலிக  ஒட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது. அமைச்சரின் இந்த அறிவிப்பு தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கும் செயலாகும்.
ஏற்கெனவே இதுபோன்ற பிரச்சினைகளின் போது பயிற்சியற்ற ஓட்டுநர்களை தற்காலிகமாகப் பணியமர்த்தி பேருந்துகளை இயக்கியபோது விபத்துகள் ஏற்பட்டுள்ளன என்பதைத் தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு உரிய தீர்வு ஏற்படும் வகையில் மீண்டும் உடனடியாக போக்குவரத்து சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply