போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பொது மக்கள் பெரிதும் பாதிப்பு: உடனடியாக தீர்வுகாண மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பொது மக்கள் பெரிதும் பாதிப்பு:
உடனடியாக தீர்வுகாண மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
koyambedu-bus-600-04-1493907076
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,700 கோடி நிலுவைத் தொகை, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க ரூ.100 கோடி வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகள் குறித்து போக்குவரத்து நிர்வாகத்துடன் நடைபெற்ற 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், போக்குவரத்து ஊழியர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் சென்னை உட்பட தமிழகத்தில் பெரும்பகுதிகளில் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். கோடை காலத்தில் பள்ளிவிடுமுறை நாட்களில்  வெளியூர்களுக்கு செல்வோரும் ஏற்கெனவே விடுமுறைக்காக வெளியூருக்குச் சென்றவர் மீண்டும் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பேரூந்துகள், ஆட்டோக்கள், கால் டாக்சிகளின் கட்டணங்கள் பன்படங்கு உயர்ந்துள்ளது. இந்த போராட்டத்தால் மக்கள் படும் துன்பங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுதான் காரணம் போக்குவரத்து தொழிலாளர். பிரச்சினையில் ஆரம்பம் முதலே மெத்தனப்போக்கை கடைப்பிடித்ததால்தான் இந்தப் போராட்டம் வெடித்துள்ளது.
எனவே, தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக போக்குவரத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான நீண்ட கால கோரிக்கையை ஏற்று இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வுகாண வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply