புதுவையில் தன்னிச்சையாக மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து ஜனநாயகப் படுகொலை செய்த பாஜக! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

புதுவையில் தன்னிச்சையாக மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து ஜனநாயகப் படுகொலை செய்த பாஜக!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
kiran bedi_7
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
புதுச்சேரி சட்டமன்றத்துக்கு பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநில தலைவர் சாமிநாதன், மாநில பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை ஆளுநர் கிரண்பேடியின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை வழக்கமாக புதுவையில் ஆளும் அரசு தேர்வு செய்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கும். அந்தப் பெயர்களை ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார். அதன்பின் அவர்கள் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்படுவார்கள்.
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கும்போது மாநில அரசுக்கு தெரியாமல் மத்திய பிஜேபி அரசு பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து ஜனநாயகத்தைப் படுகொலை செய்துள்ளது. இது இந்திய ஜனநாயக விதிமுறைகளுக்கு நேர்மாறான செயல், ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்ககூடிய செயல். மேலும் இச்செயல் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கையே எடுத்துக் காட்டுகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை செயல்பட விடாமல், அரசுக்கு எதிராக பல்வேறு தடைகளைப் போட்டு அரசு நிர்வாகத்தை சீர்குலைத்து கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடிக்க பாஜக துடிக்கிறது. தான் ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பதை மறந்து ஒரு பிஜேபிக்காரராகவே முழுமையாக மாறி மத்திய பிஜேபி அரசுக்கு உறுதுணையாக செயல்பட்டு வரும் ஆளுநர் கிரண்பேடியையும் மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
புதுச்சேரியில் நடைபெற்று வரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை செயல்படவிடாமல் தடுத்து வரும் மத்திய பிஜேபி அரசையும், கவர்னர் கிரண்பேடி செயலையும் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி மிகப்பெரிய அளவில் புதுவை மாநிலத்தில் போராட்டத்தை நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply