புதுச்சேரி சட்டமன்றத்தில் மாட்டிறைச்சி தடைக்கு எதிரான தீர்மானம்! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!

புதுச்சேரி சட்டமன்றத்தில் மாட்டிறைச்சி தடைக்கு எதிரான தீர்மானம்!
மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!
pudu
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்ய மத்திய அரசு கடந்த மே 23 அன்று தடைவிதித்ததைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. தமிழகம் உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மாட்டிறைச்சிக்கு ஆதரவாகப் போராடி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் மாடு, காளை உள்ளிட்ட கால்நடை விற்பனை தடைக்கான உத்தரவை எதிர்த்து இன்று புதுச்சேரி மாநில சட்டமன்ற¢ப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில முதலமைச்சர் திரு. நாராயணசாமி கொண்டுவந்த இந்த தீர்மானத்தில் “மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள விலங்குகள் வதை தடுப்பு கால்நடை விற்பனை விதிமுறைகள் சட்டம் கால்நடை வளர்ப்போரின் உரிமைகளைப் பறிப்பதாகவும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் உள்ளது.
நாட்டு மக்கள் உண்ணும் உணவையும் கடைப்பிடிக்கும் மதத்தையும் அவரவர் தீர்மானித்துக் கொள்ள தனிமனித சுதந்திரம் உள்ளது. மத்திய அரசு தனி மனித சுதந்திரத்தில் தலையிட்டு மாட்டிறைச்சி, ஒட்டக இறைச்சி, எருமை இறைச்சி உண்ணக்கூடாது என்று சட்டம் போடுவதை ஏற்க முடியாது.
புதுச்சேரி, பிரெஞ்சு கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்தது. அனைத்து தரப்பு மக்களும் கலந்துள்ளனர். மத்திய அரசின் தடை அரசாணைக்கு அனைத்து தரப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே கால்நடை விற்பனை விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கேரளா மற்றும் மேகலாயா மாநில சட்டமன்றப் பேரவைகளில் மாட்டிறைச்சி தடைக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது புதுச்சேரி மாநில அரசு நிறைவேற்றியுள்ள சிறப்புவாய்ந்த இந்த  தீர்மானத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கிறேன்.
அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரி அரசுகள் தமது சட்டமன்றப் பேரவைகளில் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை ஆணைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டுள்ளது ஏற்புடையது அல்ல.
மாட்டிறைச்சி தடைக்கு எதிராக களம் கண்டுள்ள தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே மாட்டிறைச்சி தடையை எதிர்த்து தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என திரு. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply