நெடுஞ்சாலை அருகில் உள்ள மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவு! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!

நெடுஞ்சாலை அருகில் உள்ள மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவு!
மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!
TASMAC
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
அனைத்து மாநில அரசுகளும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகளுக்கு ஏப்ரல் 1, 2017 முதல் உரிமம் வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தமிழகத்திற்கு ஏராளமான வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், அத்துடன் 500 மீட்டர் தொலைக்கு பதில் 100 மீட்டர் தொலைவாக மாற்றி உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் நடத்த இன்று முதல் தடை விதித்துள்ளது. 20,000 மக்கள் தொகை கொண்ட பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகள் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுபானக் கடைகளை உடனடியாக மூடவேண்டும் என்றும், இந்த உத்தரவு உணவு விடுதிகள், நட்சத்திர விடுதிகள், மனமகிழ் மன்றங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த சிறப்புமிக்க தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களும் தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
 தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply