நெடுஞ்சாலைகளில் மூடிய மதுக்கடைகளைத் திறக்க மாவட்ட சாலைகளாக மாற்ற தமிழக அரசு ஆலோசனை? மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

558 Views
நெடுஞ்சாலைகளில் மூடிய மதுக்கடைகளைத் திறக்க மாவட்ட சாலைகளாக மாற்ற தமிழக அரசு ஆலோசனை?
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
tasmac
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
அனைத்து மாநில அரசுகளும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகளுக்கு ஏப்ரல் 1, 2017 முதல் உரிமம் வழங்கக்கூடாது எனவும், நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் நடத்த ஏப்ரல் 1, 2017 முதல் தடைவிதித்தும் 20,000 மக்கள் தொகை கொண்ட பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகள் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுபானக் கடைகளை உடனடியாக மூடவேண்டும் என்றும், இந்த உத்தரவு உணவு விடுதிகள், நட்சத்திர விடுதிகள், மனமகிழ் மன்றங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மது அருந்தி வாகனம் ஓட்டிச் செல்பவர்களே அதிக அளவில் சாலை விபத்துகளில் மரணமடைகிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் நெடுஞ்சாலை ஒரங்களில் உள்ள மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவால் அரசிற்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், மதுக்கடைகளில் பணியாற்றிவரும் பல்லாயிரக் கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது என்றும் மது ஆலை அதிபர்கள், மது வணிகர்கள் உள்ளிட்டோரின் தூண்டுதலின் பேரில் மத்திய மாநில அரசுகள் இந்த உத்தரவை எதிர்த்து வருகின்றன.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தமிழக அரசு, மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட நெடுஞ்சாலைகளாக வகைமாற்றம் செய்ய ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன, இதனை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மதுவிலக்கு கொள்கையில் இரட்டை வேடம் போடும் மோடி தலைமையிலான பாஜக ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசம், கோவா, ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக வகைமாற்றம் செய்துள்ளது. அதற்கு மேலாக மதுவிலக்கு உள்ள குஜராத்திலிருந்து வந்த மதுவிலக்கு நாயகர்- என ஊதிப் பெரிதாக்கப்பட்ட மோடியின் தலைமையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மூடப்பட்ட மதுக்கடைகளைத் திறக்க புதிய சட்டம் இயற்ற முடியுமா என ஆலோசனை நடைபெற்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மதுவிலக்கு கொள்கையில் பாஜகவின் இரட்டை வேடத்தை தமிழக அரசு பின்பற்றி வருவது வெட்கத்திற்குரியது. வருவாய் இழப்பை ஈடுக்கட்டவும், மதுக்கடைகளில் பணியாற்றி யவர்களை வேறு பணிகளுக்கு மாற்றவும் தமிழக அரசிற்கு பல திட்டங்கள் இருந்தும் மனித இனத்திற்கு தீங்கு விளைவிக்கும் மதுக்கடைகளுக்காக அரசு இயந்திரம் இவ்வளவு முயற்சிப்பது வேதனை அளிக்கிறது.
எனவே, மாநில நெடுஞ்சாலைகளை வகைமாற்றம் செய்வதை விட்டுவிட்டு உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply