நீட் தேர்வுக்கு பயில தமிழில் புத்தகங்களை அரசு வழங்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

நீட் தேர்வுக்கு பயில தமிழில் புத்தகங்களை அரசு வழங்க வேண்டும்:
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
neet
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்பே ரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
நீட்  (NEET- National Eligibility Entrance Test) எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் மூலம் மட்டுமே பிளஸ் 2 வுக்குப் பின் பொது மருத்துவம், பல் மருத்துவம் போன்ற மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்திற்கு இந்த நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், மே மாதம் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு தமிழகத்தில் சுமார் 88 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அத்தேர்வுக்கான பாடங்களைப் பயில தேவையான புத்தகங்கள் அனைத்தும் ஆங்கிலம்  மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.
தமிழிலும் நீட் தேர்வு நடைபெறும் என்றபோதும், அதற்கான பாடப் புத்தகங்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் இருப்பதால் தமிழக மாணவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மாநில மொழிகளில் தேர்வு எழுத உள்ள கிராமப்புற, ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தப் பாடப் புத்தகப் பிரச்சினையால் மன உளைச்சலுக்கும் மாணவர்கள் உள்ளாகி உள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் வடமாநில மாணவர்கள் அதிகமானோர் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லு£ரிகளில் இடம்பெறுவார்கள்.  தமிழக மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாக் கனி ஆகிவிடும்.
எனவே, நீட் தேர்விலிருந்து உடனடியாக தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், அதற்கு முன் நீட் தேர்வு நடைபெற்றால் அதற்கான பாடப் புத்தகங்களை உடனடியாக தமிழில் மொழிபெயர்ப்பு செய்து தமிழக அரசால் வெளியிடப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply