நக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு!

454 Views
நக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு!
gopal
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்  பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் இதழின் ஆசிரியருமான திரு. கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருப்பதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பாலியல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி விவகாரம் குறித்து நக்கீரன் இதழில் தொடர்ச்சியாக எழுதியதைக் காரணம் காட்டி நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். நிர்மலா தேவி விவகாரம் குறித்து எழுதியது ஆளுநர் பணியில் குறுக்கிடுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு திரு. கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது ஆளுநர் அலுவலகத்தின் பதட்டத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள திரு. கோபால் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்ச நிலையாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆட்சியாளர்கள், கருத்துரிமைக்கு பெரும் ஊறுவிளைவித்து வருகிறார்கள். நாட்டின் நீதி பரிபாலன சபையான உயர்நீதி மன்றத்தையும், காவல்துறையையும் மிக மோசமாக விமர்சித்த பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவைக் கைது செய்யாத காவல்துறை, ஆளுநர் அலுவலகம் புகார் அளித்த உடனேயே நக்கீரன் கோபாலைக் கைது செய்திருப்பது தமிழக அரசின் பாரபட்சப் போக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
நக்கீரன் கோபால் அவர்கள் கைது செய்திருப்பது தமிழகத்தில் பத்திரிகைச் சுதந்திரம் நசுக்கப்பட்டு வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஜனநாயக நாட்டில் ஆளுநரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர் தான். ஆளுநரின் செயல்பாட்டை விமர்சித்தால் அது அவரது பணியில் தலையிடுவதாகக் குறிப்பிடுவது தமிழகத்தில் ஜனநாயகம் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது என்பதன் அடையாளமாக அமைந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபால் அவர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் உடனே திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map