தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு; மோடி அரசின் மெத்தனப் போக்கே காரணம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு; மோடி அரசின் மெத்தனப் போக்கே காரணம்
sri-lanka-navy-firing-on-indian-fishermen_secvpf
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
நாகை மாவட்டம், கோடியக்கரை கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மீனவர்கள் அரவிந்த் மற்றும் தினேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தக் கொடூரத் தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதல்களில் சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மீனவர் பேச்சுவார்த்தையின் போது இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா “தமிழக மீனவர்களைக் கைது செய்யும் எங்கள் நடவடிக்கை தொடரும்” என்று அறிவித்தும் அதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு வலுவான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. டெல்லியில் நடந்த பேச்சு வார்த்தைகளின் போது இந்தியத் தரப்பு அமைச்சர்களும் அதிகாரிகளும் வலுவாக தமிழக மீனவர்களின் நலன் காக்கும் வகையில் கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்று பேச்சு வார்த்தைகளில் பங்கு கொண்ட தமிழக மற்றும் புதுவை மாநில மீனவர்களின் பிரதிநிதிகள் விமர்சித்துள்ளனர். மத்திய அரசின் மெத்தனப் போக்கை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இலங்கை, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதற்கு பிரதமர் மோடியே பொறுப்பேற்க வேண்டும்.
மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து துப்பாக்கிச் சூட்டிற்கு தனது கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக
Leave a Reply