தமிழக மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்பந்தம்! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!!

தமிழக மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்பந்தம்!
மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!!
hydro
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலும், புதுச்சேரியில் காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி தற்போது அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இதனை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் “ஹைட்ரோ கார்பன்” எனும் “நீர்கரிம வாயுக்கள்” எடுக்க மத்திய அரசு ‘ஜெம் லெபாரட்டரீஸ்’ என்னும் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த நிறுவனம் மல்லிகார்ஜூனப்பா சித்தேஸ்வரா எனும் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான நிறுவனம் ஆகும்.
சுற்றுச்சூழல் பேரழிவையும், புற்றுநோயையும் உருவாக்கும் ஆபத்தான இந்த திட்டத்திற்கு நெடுவாசல் உள்ளிட்ட தமிழக மக்கள் அனைவரும் எதிர்த்து வருகின்றனர். தமிழக மக்களின் தொடர் போராடங்களையும், கோரிக்கைகளையும் பொருட்படுத்தாமல் தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக மோடி அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது என்பது ஜனநாயக விரோத செயல் ஆகும். கடந்த வாரம் டெல்லி சென்ற ஹைட்ரோ கார்பன் போராட்டக் குழுவினர் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசிய போது மக்களுக்கு எதிர்ப்பு உள்ள திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றாது என அவர் உறுதியளித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அந்த உறுதிமொழிகளையெல்லாம் மீறி வழக்கம்போல் மத்திய பாஜக அரசு சொல்வதொன்று செய்வதொன்று என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளது.
தமிழக மக்களால் பெரிதும் எதிர்க்கப்படும் இந்த திட்டத்தின் ஒப்பந்தத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
 தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply