தமிழக நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

தமிழக நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
Ration-shop
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவற்றை கடந்த சில மாதங்களாக சரிவர கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அரசால் ரூ.30க்கு வழங்கப்படும் பருப்புகளை நியாய விலை கடைகளில் இருப்பு இல்லாததால் ரூ.100 கொடுத்து  தனியார் நிறுவனங்களில் வாங்கும்  நிலைக்கு ஏழைமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 33,973 நியாய விலை கடைகள் உள்ளன. இவற்றின் மூலமாக 1.98 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைந்து வருகின்றனர். சமீப காலமாக தமிழகத்தின் பெரும்பாலான நியாய விலை கடைகளில் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் மட்டும் தான் அனைத்து பொருட்களும் கிடைகிறது அதன்பிறகு இருப்பு இல்லை என திருப்பி அனுப்பும் நிலை நிலவி வருகிறது. இதன்காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மாதத்தின் முதல் தேதி முதல் மூன்றாம் தேதிவரை காலை 6 மணிமுதலே பெரும் கூட்டமாக நியாய விலை கடைகளில் காத்துக்கிடக்கிறார்கள். இந்த மாதம் அத்தியாவசிய பொருட்களான பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல தமிழக மக்கள் பெரிதும் பயன்படுத்தும் அரிசிக்கு பதிலாக, கோதுமை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, தமிழக ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சமையலறையில் பெரும் பங்கு வகிக்கும் நியாய விலை பொருட்களை, நியாயவிலை கடைகளுக்கு மாதமாதம் சரியான முறையில் விநியோகம் செய்யவும், மாத்தின் அனைத்து நாட்களிலும் அனைத்து பொருட்களும் இருப்பு வைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
 தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply