தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
jawahirullah1
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
இன்று (20.02.2017) தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 500 மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. 500 மதுக்கடைகளை மூடுவது என்பது வரவேற்கத்தக்க அறிவிப்பாக இருந்தாலும், முழுமையான மதுவிலக்கே தமிழக மக்களுக்கு பயனளிப்பதாக இருக்கும் என மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது.
தமிழ்நாட்டின் கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்து குடும்பங்களில் உள்ள ஆண்கள் பெரும்பாலானவர்களும் இளைய வயதினரும் இப்போது மதுவுக்கு அடிமையாகி விட்டனர். குடும்பங்களின் மீது பற்றின்றி, தன் பிள்ளைகளின் படிப்பு, எதிர்காலம் குறித்த சிந்தனை இன்றி, வேலைக்குச் சென்று கிடைக்கும் பணத்தில் குடிப்பது ஒன்றையே கடமையாகக் கொண்டுள்ளனர்.
மதுக்கடைகளை முழுமையாக மூடவேண்டும் என்பதே தமிழக மக்களின் குறிப்பாக தாய்மார்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. மக்களின் இந்த உணர்வுகளை ஓரளவிற்கு உணர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 500 மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார்கள். ஆனால் மூடப்பட்ட இந்தக் கடைகள் குறைந்த அளவில் மது விற்பனை செய்த கடைகளே.
தற்போதுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலையில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெறும் 500 கடைகளை மூட உத்தரவிட்டிருப்பது முழுமையான பலனைத் தராது. தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட்டு, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கைக் கொண்டுவர முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply