சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையிலிருந்து தமிழ் நீக்கம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையிலிருந்து தமிழ் நீக்கம்:
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
chennai-airport-glass-breakage-600
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
விமான நிலைய அறிவிப்புப் பலகையில் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள் இதுவரை தமிழ், ஆங்கிலம், இந்தி என்று 3 மொழிகளில் வந்து கொண்டிருந்தன. ஆனால் தற்போது அந்த அறிவிப்பு பலகையிலிருந்து தமிழ் நீக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதால்  கிராமப்புறங்களிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்வோரும், அவரை அழைக்க வருவோரும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழர்கள் நலன் சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. தமிழ் மொழியையும், அதன் சிறப்பையும் முற்றிலுமாக அழித்தொழிக்கும் பணியை மத்திய பாஜக தொடர்ந்து செய்துவருகிறது.
சாலையோரங்களில் இருக்கும் மைல்கற்களில் தமிழ் மொழி அழிக்கப்பட்டு இந்தியில் எழுதியது முதல் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று கூறியது வரை தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் எதிராகவே மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
அந்தந்த மாநில மொழிகளுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டமே உரிய அங்கீகாரம் அளித்துள்ள நிலையில் இந்தியை மட்டும் மத்திய அரசு திணிப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது. எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்ற ஒற்றை மொழி கலாச்சாரத்தை தமிழக மக்கள் மீது திணிப்பதும், தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுவதே  மத்திய பாஜக அரசின் வாடிக்கையாக உள்ளது.
தமிழ் மொழியைச் சொந்த நாட்டில் இருந்தே அழித்தொழிப்பதற்கான வேலைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்ற சூழலிலும் அதனை எதிர்க்க வேண்டிய மாநில அரசு மவுனமாக, வேடிக்கைப் பார்த்துக்கொண்டே உள்ளது.
மத்திய அரசு தொடர்ந்து தமிழர்களும், தமிழுக்கும் எதிராக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு இந்தி மொழியைத் திணிக்க முயற்சித்தால் தமிழக மக்களும், மாணவர்களும், தமிழக அரசியல் கட்சியினரும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏற்கெனவே தமிழக மக்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியையும், மனக்கொதிப்பையும் 1965லேயே மத்திய அரசுக்குத் புரிய வைத்துள்ளனர்.
எனவே, சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் அறிவிப்பு பலகையில் இருந்து நீக்கப்பட்ட தமிழ் மொழியை மீண்டும் சேர்த்து அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply