சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள குடிசைகள் அகற்றம்! இடம்பெயர்ந்த மாணவர்கள் கல்வி கற்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!!

1833 Views
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள குடிசைகள் அகற்றம்! இடம்பெயர்ந்த மாணவர்கள் கல்வி கற்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!!
mhj new
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
சென்னை, கூவம் நதிக்கரையில் குடிசை அமைத்து வசித்து வந்தவர்கள் அவர்களுக்கென்று  ஒதுக்கப்பட்ட பெரும்பாக்கம் குடியிருப்புகளுக்குச் செல்ல வேண்டும் எனவும் அதற்குப்பின்பு அங்குள்ள வீடுகளை முழுவதுமாக அகற்ற வேண்டும் எனவும் தமிழக அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை ஆயிரம்விளக்கு திடீர் நகரைச் சேர்ந்த நு£ற்றுக்கணக்கான குடிசைகள் அகற்றப்பட்டு அதில் வசித்தவர்கள் அனைவரும் சென்னை பெரும்பாக்கத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். கல்வி ஆண்டின் நடுவில் எடுக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சியின் இந்த இடமாற்ற நடவடிக்கையினால் ஆயிரம்விளக்கு பகுதி சுற்றுவட்டாரத்தில் கல்வி பயின்று வந்த அக்குடிசைபகுதி மாணவர்கள் சுமார் 150 பேர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஆயிரம்விளக்கு சர்ச் பார்க் பள்ளிவளாகத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயின்று வந்த மாணவர்கள் பலர் 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரும்பாக்கத்திலிருந்து தினமும் பள்ளிக்கு வந்து செல்ல  3 மணி நேரம் பயணிக்கின்றனர். இதுமிகவும் கடினமாக உள்ளது என்று மாணவ, மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களின் கல்வி பயில உரிய ஏற்பாட்டைச் செய்துதருவதாக நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்த சென்னை மாநகராட்சியினர் இதுவரை பெரும்பாக்கத்திலிருந்து மாணவர்கள் கல்வி பயில வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியது. அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சியில் தமிழக அரசு அக்கறை செலுத்தாமல் அலட்சியம் காட்டிவருவது கண்டிக்கத்தக்கது.
எனவே, தமிழக அரசு மாணவர்களின் கல்வி எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஆயிரம் விளக்கு குடிசைப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு எனப் பிரத்யேக பேருந்துகளை அவர்கள் இடம்பெயர்ந்திருக்கும் பெரும்பாக்கம் குடியிருப்பிலிருந்து தினமும் இயக்கி மாணவர்களை ஆயிரம் விளக்குப் பகுதி பள்ளிகளில் கொண்டு சேர்த்தும், அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இம்மாணவர்களுக்கு காலை சிற்றுண்டிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அடித்தட்டு மக்களின் வாழ்விடங்களை அப்புறப்படுத்தும் தமிழக அரசு, பாரபட்சமின்றி நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள அரசு கட்டடங்கள், தனியார் வணிக கூடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை அப்புறப்படுத்துவதிலும் இதே வேகத்தைக் காட்ட வேண்டும் என்று கோருகிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply