சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றுவதை உடனே கைவிட வேண்டும்!

சிப்பெட் நிறுவனத்தை
டெல்லிக்கு மாற்றுவதை உடனே கைவிட வேண்டும்!

cipet-1
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

மத்திய அரசின் இரசயானம் மற்றும் உரத்தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கி வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனமான சிப்பெட் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

1968 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் மிகச் சிறப்பாக லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் கல்வியில் பட்டயப் படிப்பு முதல்  ஆராய்ச்சிப் படிப்பு வரை அளித்து வரும் இந்த நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டில் மட்டும் 13 ஆயிரத்து 376 மாணவர்கள் இந்த நிறுவனத்தின் கீழ் செயல்படும் மையங்களில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.

இதுபோன்ற சிறப்புமிக்க ஒரு நிறுவனத்தின் தலைமையகத்தை சென்னையிலிருந்து டெல்லிக்கு மாற்ற மோடி தலைமையிலான பாஜக அரசு முயற்சி செய்வது கண்டனத்திற்குரியது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுப்பது, ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க மறுப்பது, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழகத்தில் இடம் இல்லை என மறுப்பது, சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்ப்பது என அனைத்து முக்கிய விவகரங்களிலும் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்துவருவது தொடர்கதையாகிவிட்டது.

சென்னையில் உள்ள சிப்பெட் தலைமை அலுவலகத்தை மாற்றுவதற்கு அங்கு பணியாற்றும் 2500க்கும் மேற்பட்ட பணியாளர்களும், தொழிலாளர்களும் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்கள். எனவே, சிப்பெட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை டெல்லிக்கு மாற்றும் முடிவினை மத்திய அரசு உடனே கைவிடவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

(ஒப்பம்)

எம் எச் ஜவாஹிருல்லா

Leave a Reply