சித்திரவதைக்கு எதிரான சட்டத்தை உலகத் தரத்தில் இயற்ற வேண்டும்! பிரதமருக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

சித்திரவதைக்கு எதிரான சட்டத்தை உலகத் தரத்தில் இயற்ற வேண்டும்!
பிரதமருக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

torture

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

உலக அளவில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தினம் வரும் ஜூன் 26 அன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில் இந்தியாவில் சித்திரவதைக்கு எதிரான சட்டத்தை உலகத் தரத்தில் இயற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…

“இந்தியாவில் சித்திரவதை என்பது தொடர் நிகழ்வாகி உள்ளது. ஆண்டுதோறும் சித்திரவதைகளின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கிறது. சித்திரவதை தேசிய சிறப்புத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஆண்டுதோறும் சித்திரவதை தொடர்பாக 18 லட்சம் வழக்குகள் பதிவாகின்றது. ஆயிரக்கணக்கானோர் மனிதத்தன்மையற்ற காவல் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய மனித உரிமை ஆணையம் அளித்துள்ள அறிக்கையின்படி ஆண்டுதோறும் 1203 காவல் மரணங்கள் நாட்டில் நிகழ்கின்றன.

இந்தியாவில் கடந்த 2010ஆம் ஆண்டு சித்திரவதைத் தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை சித்திரவதைக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்படவில்லை, குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களையும், அதற்கு சாட்சி அளிப்பவர்களையும் பாதுகாக்க இந்தியாவில் இதுவரை சட்டம் இயற்றப்படவில்லை. இதேபோல் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்கான நெறிமுறைகளையும் இதுவரை வகுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் சித்திரவதைகளை அழித்தொழிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

எனவே, மத்திய அரசு ஐ.நா.சபையின் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை உடனடியாக ஏற்புறுதி செய்ய வேண்டும் என்றும், சித்திரவதைக்கு எதிரான உள்நாட்டு சட்டத்தை உலகத் தரத்தில் இயற்ற வேண்டும் என்றும், சித்திரவதைக்கு எதிரான ஐ.நா.சபையின் பிரதிநிதியை இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வமாக அழைக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.”

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply