சட்டவிரோதமாக திருமுருகன் காந்தி கைது! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

சட்டவிரோதமாக திருமுருகன் காந்தி கைது!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
tirumurugan
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
ஜெனிவாவில் ஐ.நா. மனிதஉரிமை ஆணைய அமர்வில் கருத்துரையாற்றிய மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோவைத் தாக்கிய சிங்கள வெறியர்களைக் கண்டித்து இன்று சென்னையில் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் தமிழ்புலிகள் அமைப்பின் சார்பாக நடைபெற்றது.
 இந்த போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு அளிப்பதற்காக மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி, பிரவின் உள்ளிட்டோர் சென்று இருக்கிறார்கள். வேறு அலுவல் காரணமாக இவர்கள் கைதாகும் நோக்கத்துடன் செல்லவில்லை. இதனை அப்பகுதி காவல் துணை ஆணையாளரிடமும் தெரிவித்துள்ளார்கள். அப்படியெனில் நீங்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது என்று காவல்துறை அதிகாரிகள் திருமுருகனிடம் தெரிவித்துள்ளார்கள். அந்த அடிப்படையில் திருமுருகன் பேட்டியும் அளிக்கவில்லை. இச்சூழலில் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோர் கைதாகினர். இதன்பிறகு அருகில் உள்ள தேனீர் கடையில் தேனீர் குடித்துக் கொண்டிருந்த திருமுருகன், பிரவிண் உள்ளிட்டோரை காவல்துறையினர் எவ்வித காரணமுமின்றி கைது செய்து அவர்களை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். கைதுக்கான காரணமும் தெரிவிக்கவில்லை.
 இவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் பங்கு கொண்டதாக கைது செய்திருந்தால் தமிழ்புலிகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இவர்களையும் வைத்திருக்கவேண்டும். அதுவும் செய்யாமல் கைதுக்கான காரணத்தையும் தெரிவிக்காமல் சட்டவிரோதமாக மக்கள் சேவகர்களை தடுத்து வைத்திருப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். இந்த அடக்குமுறை போக்கை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை விடுதலைச் செய்ய வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply