சகோதரத்துவம், இரக்கம், ஓற்றுமையுணர்வு தழைத்தோங்க உறுதி எடுப்போமாக! மனிதநேய மக்கள் கட்சி தியாகத் திருநாள் வாழ்த்து!!

சகோதரத்துவம், இரக்கம், ஓற்றுமையுணர்வு தழைத்தோங்க உறுதி எடுப்போமாக!
மனிதநேய மக்கள் கட்சி தியாகத் திருநாள் வாழ்த்து!!
jawahirullah
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துச் செய்தி:
ஈதுல் அள்ஹா என்னும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இறைத்தூதர் இப்ராஹீம் (அபிரகாம்) மற்றும் அவர்களது புதல்வர் இஸ்மாயீல் (இஸ்மவேல்) ஆகியோரின் ஒப்பற்ற தியாகத்தை நினைவுப்படுத்தும் வகையில் தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள் உலகமெங்கும் கொண்டாடப் படுகின்றது.
இறைவனின் நண்பர் என்று போற்றப்பட்ட இறைத்தூதர் இப்ராஹீம் அவர்கள் ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்ட அரும்பெரும் தியாகங்களைப் புரிந்தார்கள். ஈராக்கில் கொடுங்கோலன் நம்ரூத்துக்கு எதிராக துணிச்சலாக நெஞ்சை நிமிர்த்தி தனது ஏகத்துவக் கொள்கையைப் பறைசாற்றினார்கள்.
இறைத்தூதர்கள் இப்ராஹீம் மற்றும் இஸ்மாயீல் ஆகியோரின் இந்த மாபெரும் தியாகங்களை நினைவுகொள்ளும் வகையில் தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாளின் போது உலகமெங்கிலிருந்தும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் புனித மக்காவில் ஒன்றுகூடி ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள்.
பல நிறத்தவர்களாக இருந்தாலும், பல்வேறு மொழிகளை பேசினாலும், பல்வேறு கலாச்சார வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் வெள்ளை ஆடையை உடுத்தி நிறைவேற்றும் கடமைகள் சகோதரத்துவம் நிலைநாட்டப்படுவதற்கு அத்தாட்சியாக அமைந்துள்ளன.
இன்று உலகளாவிய அளவில் சிறுபான்மை சமூகங்கள் பல்வேறு சோதனைகளை எதிர்கொள்கிறது. கொடுங்கோலன் நம்ரூத் போன்ற நவீன நம்ரூத்திய ஆட்சியாளர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் தமது கொடுங்கோன்மையை கட்டவிழ்த்து வருகின்றார்கள். இத்தனை கொடுங்கோலர்களை எதிர்கொள்ள இறைத்தூதர்கள் இப்ராஹீம், இஸ்மாயீல் ஆகியோர் காட்டிய பண்பாட்டை நாம் மறந்து விடக்கூடாது. எத்தனை சோதனைகள் வந்தபோதினும் அவர்கள் இறைவன் மீது உறுதியான நம்பிக்கையும், இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் மன வலிமையையும் சோதனைகளை எதிர்கொள்ளும் வியக்கத்தக்க பொறுமையையும் கொண்டிருந்தார்கள். இறுதியில் நம்ரூத்கள் மண்ணைக் கவ்வினார்கள். இதனால் இந்த மாபெரும் இறைத்தூதர்கள் பல நூறு நூற்றாண்டுகளாக கோடான கோடி மக்களால் நினைவுகொள்ளப் படுகிறார்கள்.
சகோதரத்துவம், ஓற்றுமையுணர்வு, நிலைகுலையாமை, இரக்கம் மற்றும் தியாகத்தின் செய்தியை நமக்கு உணர்த்தும் திருநாளாக தியாகத் திருநாள் விளங்குகின்றது. இந்தத் திருநாளில் இந்த நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், பிறர் இன்பத்தில் மகிழுறும் மனநிலை ஏற்படவும் நாம் உறுதி எடுத்துக் கொள்வோமாக.
நமது நாட்டு மக்களிடையேயும் சகோதரத்துவமும், அன்பும், கருணையும், இரக்கமும் தழைத்தோங்குவதற்கு இறைவனிடம் பிரார்த்திப்போமாக.
அனைவருக்கும் நெஞ்சார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply