சகோதரத்துவமும், அன்பும், இரக்கமும் தழைத்தோங்க உறுதி எடுப்போமாக..

hajமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா
வெளியிடும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துச் செய்தி:

ஈதுல் அளுஹா என்னும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இறைத்தூதர் இப்ராஹீம் (அபிரகாம்) மற்றும் அவர்களது புதல்வர் இஸ்மாயீல் ஆகியோரின் ஒப்பற்ற தியாகத்தை நினைவுப்படுத்தும் வகையில் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்கள் தியாகத் திருநாளை கொண்டாடுகிறார்கள். இறைவனின் திருப்தியை பெறுவதற்காக நாம் நேசிக்கும் எந்தவொன்றையும் தியாகம் செய்வதற்கு முன்வர வேண்டும் என்பதற்கு சான்றாக இறைத்தூதர்கள் இப்ராஹீம், இஸ்மாயீல் மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோரின் வரலாறு அமைந்துள்ளது.

தியாகத் திருநாள் கொண்டாடப்படும் இதே தருணத்தில் உலகமெங்கிலிருந்தும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் புனித மக்காவில் ஒன்று கூடி ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள். பல நிறத்தவர்களாக இருந்தாலும், பல்வேறு மொழிகளை பேசினாலும், பல்வேறு கலாச்சார வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் வெள்ளை ஆடையை உடுத்தி நிறைவேற்றும் கடமைகள் சகோதரத்துவம் நிலை நாட்டப்படுவதற்கு அத்தாட்சியாக அமைந்துள்ளன.

சகோதரத்துவம், நிலைகுலையாமை, இரக்கம் மற்றும் தியாகத்தின் செய்தியை நமக்கு உணர்த்தும் திருநாளாக தியாகத் திருநாள் விளங்குகின்றது. இந்த திருநாளில் இந்த நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கு நாம் உறுதி எடுத்துக் கொள்வோமாக. நமது நாட்டில் வாழும் அனைத்து மக்களிடையேயும் சகோதரத்துவமும், அன்பும், கருணையும், இரக்கமும் தழைத்தோங்குவதற்கு இறைவனிடம் பிரார்த்திப்போமாக.
அன்புடன்,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக

Leave a Reply