கோவையில் கலவரத்தைத் தூண்ட சதி: காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க தமுமுக வலியுறுத்தல்!

1814 Views
கோவையில் கலவரத்தைத் தூண்ட சதி:
காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க தமுமுக வலியுறுத்தல்!
kovai-2
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
கோவையில் நேற்றிரவு இந்து முன்னணியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. கொலை செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் விரைவாகக் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்று தமுமுக கோருகிறது.
அதேசமயம், இந்துத்துவாவைச் சேர்ந்த யாரேனும் தமிழகத்தில் கொலை செய்யப்பட்டாலோ, தாக்கப்பட்டாலோ காவல்துறை முதல்கட்ட விசாரணையைக்கூட ஆரம்பிக்காத நிலையிலேயே ‘கொலை செய்தவர் அல்லது தாக்கியவர் முஸ்லிம்கள் தான்’ என்று கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் திட்டமிட்டு பிரச்சாரம் செய்வதும், அதையே காரணமாக்கி முஸ்லிம்களைத் தாக்குவதும், அவர்களது சொத்துக்களை நாசப்படுத்துவதும், பள்ளிவாசல்களை உடைப்பதுமாக கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று நேற்றிரவு முதல் குறிப்பாக இன்று காலையில் இருந்து இந்துத்துவா அமைப்பினர் கோவையில் பலத்தக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சதியோடு வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளிவாசல்கள் மீது பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசி வருகின்றனர். தேவாலயங்களையும் கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். கோவை துடியலூரில் போலீஸ் ஜீப்பையும் தீவைத்து எரித்துள்ளனர். அரசுப் பேருந்துகள் உட்பட 50க்கும் மேற்பட்ட வாகனங்களையும் நாசம் செய்துள்ளனர்.
கோவை மாநகரக் காவல்துறையினர், கலவரம் பரவாமல் தடுப்பதற்குண்டான முயற்சிகளை செய்து வந்தாலும் அந்த முயற்சிகள் கலவரத்தைத் தூண்டுபவர்களின் வெறிச்செயலை தடுப்பதற்கு தேவையான அளவிற்கு இல்லை என்று தமுமுக கருதுகிறது. மேலும் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த தலைவர் ஒருவர், ‘குஜராத் கலவரத்தைப் போன்று நடத்தவும் தயங்க மாட்டோம்’ என்று மீடியாக்களிடம் உளறியிருப்பதும் கோவையில் பெரிய அளவில் கலவரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்ற எமது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
1997 நவம்பர் கலவரத்திற்குப் பின் கோவை மாநகரம் அமைதியடைந்து அனைத்து மதத்தவர்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய சூழலில், இந்த ஒற்றுமையைத் தகர்க்கவும், பிற மாநிலங்களில் கலவரத்தைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடுவது போல தமிழ்நாட்டையும் கலவரப் பூமியாக்கி அரசியல் ஆதாயம் பெற முயற்சி செய்யும் இந்துத்துவா அமைப்புகளின் திட்டமிட்ட செயலாகவே இதைக் கருதுகிறோம்.
மாண்புமிகு தமிழக முதல்வரும், தமிழகக் காவல்துறையும் இந்த சதிச்செயலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆகவே சசிகுமாரைக் கொன்ற உண்மைக் குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாமல், கலவரத்தை உண்டாக்கி பொதுச் சொத்துக்களை நாசப்படுத்திய கயவர்களையும் தயவு தாட்சண்யமின்றி கைது செய்து தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்று தமுமுக கோருகிறது. மேலும் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட இதர பதற்றமான பகுதிகளிலும் காவல்துறை தனது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென்றும் தமுமுக கோருகிறது.
அன்புடன்
ஜே.எஸ்.ரிபாயீ
தலைவர், தமுமுக
Leave a Reply