குட்கா ஊழலில் அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்பு தமிழகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது!!

472 Views
குட்கா ஊழலில் அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்பு 
தமிழகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது!
jawahirullah
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குட்கா அதிபர் மாதவராவ் டைரியில் உள்ள பெயர்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் 40 இடங்களில் இந்தச் சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.
ஆளும் கட்சியின் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஆரம்பம் முதலே குட்கா ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தபோது அவர் மீது தமிழக முதல்வர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்ததே இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் அவரின் வீட்டிற்குச் சென்று சோதனை செய்ய வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது. அதேபோல், இந்த ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் டி.ஜி.பி. ராஜேந்திரன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாகப் பொறுப்பில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் வீட்டில் சி.பி.ஐ. சோதனையிட்டு வருகிறது.
உயர்ந்த பொறுப்புகளில் உள்ளவர்களின் வீடுகளில் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சோதனை நடத்தும் அளவிற்குத் தமிழக அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் ஊழலுக்குத் துணை போவதற்கான சுதந்திரத்தை வழங்கியுள்ளது கண்டனத்திற்குரியது. இந்தச் சோதனையால் தமிழகம் பெரும் அவமானத்திற்கும், தலைக்குனிவிற்கும் உள்ளாகியுள்ளது.
எனவே, இனியும் காலத்தைக் கடத்தாமல் குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் தலைமை இயக்குனர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டுமென்று கோருகிறேன். இல்லையெனில் இவர்களைப் பதவி நீக்கம் செய்ய தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map