1844 Views
காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
காவிரி விவகாரத்தில் தமிழக மக்கள் உணர்வுகளுக்கும், தன்னெழுச்சியான போராட்டங்களுக்கும் மதிப்பளிக்காத மத்திய பாஜக அரசு மீண்டும் மீண்டும் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் இன்று காவிரி தொடர்பான வழக்கில் வாதாடிய மத்திய அரசு வழக்குறைஞர் “காவிரி நிதிநீர் தொடர்பான வரைவுத் திட்டம் தயாராக உள்ளதாகவும் ஆனால் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒப்புதல் பெற முடியவில்லை” என ஒரு வெற்றுக் காரணத்தைக் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஏற்கெனவே காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வரும் மத்திய பாஜக அரசு தற்போது மீண்டும் கால அவகாசம் கோரி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை கிடைக்காமல் செய்துவருகிறது.
ஜூன் 12 மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீரை திறந்துவிட வேண்டுமெனில் கர்நாடகம் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய மத்திய அரசோ தனது அரசியல் லாபத்திற்காக தமிழகத்தையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சிதைத்து வருகிறது.
தமிழகத்தின் உயிர்நாடி பிரச்னையான காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக மோடி அரசு செயல்படுவதை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. காவிரிக்காக தமிழகத்தில் வரலாறு காணாத எழுச்சிப் போராட்டங்களை நடத்திவரும் திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசைப் பணிய வைக்க மேலும் வீரியமான போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி