1899 Views
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது வெளியிடும் அறிக்கை:
தமிழ்நாடு-கர்நாடகம் இடையிலான காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த அக்டோபரில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டிருந்த நிலையில் மத்திய அரசு அதை நிறைவேற்ற மறுத்து, கடந்த அக்டோபர் 19 அன்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசுகள் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்யும் மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் பிஜேபி தலைமையிலான மத்திய அரசு எதிர்த்து வந்தது.
இதுதொடர்பான வழக்கில் காவிரி நடுவர் மன்றத் இறுதித் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு எனவும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்க வேண்டும் எனவும் டிசம்பர் 15 வரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்த சிறப்புமிக்க உத்தரவை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் இனியும் காலம் தாழ்த்தாமல் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
ப.அப்துல் சமது
பொது செயலாளர், மமக