காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக மக்களுக்கு மத்திய அரசு நடுநிலை தவறி துரோகம் இழைத்துள்ளது!

1797 Views
காவிரி மேலாண்மை வாரியம்:
தமிழக மக்களுக்கு மத்திய அரசு  நடுநிலை தவறி துரோகம் இழைத்துள்ளது!
mhj-redpix
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழ்நாடு-கர்நாடகம் இடையிலான காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் 4ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று (3-10-2016) மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என்றும், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு வாரியத்தை அமைக்க உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு செப்டம்பர் 20 மற்றும் 30ஆம் தேதிகளில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டுமென்றும் மத்திய அரசு கோரியுள்ளது.
மத்திய அரசின் இந்தப் போக்கு கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கௌடாவின் கருத்துக்களை அங்கீகரிக்கும் வகையில் உள்ளது. மேலும் கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நடுநிலைத் தவறி காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசின் இத்தகையப் போக்கை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. காவிரி விவகாரத்தில் மோடி அரசு நியாயமாக செயல்படும் என்ற நம்பிக்கையை தமிழக விவசாயிகள் உட்பட அனைவரும் இழந்திருக்கிறார்கள்.
எனவே, தமிழக அரசு காவிரி விவகாரம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தையும், சிறப்பு சட்டமன்றப் பேரவை கூட்டத்தையும் உடனே கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக
Leave a Reply