கர்நாடகத்திலிருந்து வரும் உபரி நீர் வீணாகாமல் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

1345 Views
கர்நாடகத்திலிருந்து வரும் உபரி நீர் வீணாகாமல் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: 
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! 
hohenakkal-increases-after_SECVPF
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
கர்நாடகம்  ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. தண்ணீரும் ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி.யும், ஆகஸ்டில் 45.95 டி.எம்.சி.யும் செப்டம்பரில் 36.76 டி.எம்.சி, அக்டோபரில் 20.22 டி.எம்.சி, நவம்பரில் 13.78 டி.எம்.சி., டிசம்பரில் 7.35 டி.எம்.சி., ஜனவரியில் 2.76 டி.எம்.சி., பிப்ரவரி முதல் மே வரை 2.50 டி.எம்.சி தண்ணீர் என மொத்தம் 177.25 டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தற்போது கர்நாடகத்தில் கனமழை பெய்து அதன்காரணமாக அங்கு இருக்கக்கூடிய அணைகளில் தண்ணீரை தேக்க முடியாமல் உபரி நீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.
இந்த அளவிற்கு அதிக அளவில் தண்ணீரைத் திறந்துவிட்டு தமிழகத்திற்கு தேவைப்படக்கூடிய காலகட்டத்தில் மொத்தமாகக் கணக்கு காட்டுவது கர்நாடகத்தின் வழக்கமாக இருக்கிறது.
மாதந்தோறும் எந்த அளவிற்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறதோ அந்த அளவிற்கு தண்ணீரைத் திறந்துவிடாமல் அதிகமாக தண்ணீரை திறந்துவிடுவது கர்நாடகத்தில் உள்ள அணைகளைப் பாதுகாக்க வேண்டிதான் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
தமிழகத்திற்கு தண்ணீர் தேவைப்படக்கூடிய காலக்கட்டத்தில் தண்ணீரை திறக்காமல் உபரி நீரை மட்டும் திறந்து விடுவது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது.
மேட்டூர் அணை 93.47 டி.எம்.சி அளவிற்கு மட்டுமே தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். அதற்கு கீழ் உள்ள சிறிய அணைகள் எல்லாம் அதிகமான அளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத சூழல் உள்ளது.
காவிரியில் ஒரு காலக்கட்டத்தில் தண்ணீர் இல்லாத சூழலும், உபரியாக வரும் போது அதனைத் தேக்கி வைக்க வசதி இல்லாத சூழலும் நிலவுகிறது.
எனவே, இந்த உபரி நீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும் எனவும், மேட்டூரில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் காவிரி பாசனப் பகுதிகளுக்கு இம்மாத இறுதிக்குள் மேட்டூர் அணையிலிருந்து நீரைத் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதேபோல் மேட்டூரிலிருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை உள்ள பாசனப் பகுதிகளுக்கு செல்லும் வகையில் பாசன வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் கால்வாயில் மண்டிக்கிடக்கும் புதர்களையும் அகற்ற போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணியை பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ள வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map