ஒகி புயல் தேசம்: மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் சுணக்கம் காட்டும் தமிழக அரசு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

ஒகி புயல் தேசம்: மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் சுணக்கம் காட்டும் தமிழக அரசு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
puyal
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கி உயிர் மற்றும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்புயலாலும் தொடர் மழையினாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. மின்சாரக் கம்பங்கள் சாய்ந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் காணப்படுகின்றன. அத்தியாவசிய உணவு, குடிநீர் போன்ற பொருட்களுக்கு பொதுமக்கள் அல்லல்படும் நிலை உருவாகியுள்ளது.
குமரி மாவட்டத்தையே புரட்டிபோட்டுள்ள இந்தப் புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்கவும் அவர்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் கன்னியாகுமரி மாவட்டமும், தமிழக அரசும், கன்னியாகுமரி மாவட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான பொன் ராதகிருஷ்ணனும் அம்மாவட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்காமல் அலட்சியம் காட்டிவருவதாக அம்மாவட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் ஒரு பேரிடர் ஏற்பட்டால் அதற்காக வேறு மாவட்ட அதிகாரிகள், அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டு இரவு பகலாக மீட்புப் பணியையும், அமைச்சர்கள், அரசுத்துறை உயரதிகாரிகள் என அனைவரும் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் போது, கன்னியாகுமரி உள்ளிட்ட வேறு மாவட்டங்களுக்கு இதுபோன்ற மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை செய்யாதது பாராட்சமானது. தமிழக அரசின் இதுபோன்ற பாரபட்ச நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது.
எனவே, கன்னியாகுமரி புயல்சேதங்களிலிருந்து உடனடியாக அம்மக்களை மீட்கவும், நிவாரணங்களை வழங்கவும் அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் தலைமையிலான குழுக்களை அமைத்தும், வேறு மாவட்டங்களிலிருந்து மின்சார ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட மிக அத்தியாவசிய துறைகளைச் சேர்ந்த பணியாளர்களைக் கன்னியாகுமரிக்கு அனுப்பியும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply