எண்ணூர் கப்பல் விபத்து: கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை அகற்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

எண்ணூர் கப்பல் விபத்து: கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை அகற்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!
ennore
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
கடந்த ஜனவரி 28ஆம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு ஈரானிலிருந்து சமையல் எரிவாயு ஏற்றிவந்த கப்பலும், மும்பையில் இருந்து கச்சா எண்ணைய் ஏற்றிவந்த கப்பலும், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில், கச்சா எண்ணெய் ஏற்றிவந்த கப்பலில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதன்காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. அந்தப் பகுதி முழுவதும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்களுக்கு மூச்சுத் திணறல்கள் ஏற்பட்டுள்ளன.
அந்த விபத்து ஏற்பட்டு இன்றுடன் 6 நாட்கள் முடிந்த பிறகும், நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தாமல், வாளிகளைக் கொண்டும் கூடைகளைக் கொண்டும் கழிவுகளை அப்புறப்படுத்தி வருவது வேதனைக்குரியது. வளைகுடா நாடுகளில் இதுபோன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதுண்டு. அங்கெல்லாம் ஆயில் மோப் ஸ்கிம்மர் முறை பயன்டுத்தப்படுகின்றது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் சுற்றுச் சூழலைப் பாதுகாத்து கைகளினால் கழிவுகளை அகற்றும் கடலோர காவல்படையினர் மற்றும் இப்பணியில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்களின் உடல் ஆரோக்கியதையும் பாதுகாக்கலாம்.
கடல்நீரில் கலந்துள்ள இந்தக் கழிவு, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக தண்ணீர் எடுக்கப்படும் பகுதிகளில் பரவினால் அது படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சென்னை மாநகர மக்களின் உடல் நலத்தை அது கடுமையாக பாதிக்கும். அதேபோல் இந்தக் கசிவினால் எண்ணூர் கடல்பகுதி முதல் நீலாங்கரை வரையிலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை சம்மந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து பெற்று நிவாரணம் வழங்க வேண்டும்.
எண்ணெய் கசிவையே நவீன தொழில்நுட்ப முறையைக் கையாளத் தெரியாத மத்திய மாநில அரசுகள் இந்தியாவில் பல பகுதிகளில் தொடர்ந்து நிறுவப்பட்டு வரும் அணு உலைகளில் திடீரென பாதிப்பு ஏற்பட்டால் அதனை எப்படிக் கையாளப் போகின்றன என்பதையும், அதற்கான முன்னேற்பாடு என்ன என்பதையும் விளக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply