உள்ளாட்சி வார்டுகள் வரையறை: பல்வேறு தரப்பிற்கு உரிய அவகாசம் அளித்து கருத்துகளை பெறவேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

உள்ளாட்சி வார்டுகள் வரையறை:
பல்வேறு தரப்பிற்கு உரிய அவகாசம் அளித்து கருத்துகளை பெறவேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
mhj redpix
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற¢ அளித்த உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி வார்டுகளை வரையறை செய்யும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நேரடியாக செய்ய வேண்டிய இந்த வார்டு வரையறைக்கான பணிகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த செயலை மனிதநேய மக்கள் கட்சி எதிர்க்கிறது.
அதேபோல் வார்டுகள் வரையறைகளுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் உள்ளிட்டவர்களிடம் கருத்துகளைக் கேட்டு அதன் அடிப்படையில் வார்டுகளை வரையறை செய்வதுதான் வழக்கம். ஆனால் இந்த முறைக்கு முற்றிலுமாக மாறுபட்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு உரிய அவகாசம் அளிக்காமல், வார்டு வரைமுறை தொடர்பாக கடந்த 29ம் தேதி அறிவித்து 3 நாட்களுக்குள் கருத்துகளை அளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறுகிய கால அவகாசத்தில் கருத்துகளை தெரிவிப்பது என்பது சாதியமில்லாதது.
மேலும் வார்டு வரையறை என்ற பெயரில் சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளை சிதைத்து பிரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுபான்மையின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக சிறுபான்மையினர் இருப்பதையும், உள்ளாட்சிகளில் சிறுபான்மை யினரின் பிரதிநிதித்துவத்தை பறிப்பதும் ஜனநாயக விரோத செயலாகும்.
எனவே, இந்த உள்ளாட்சி வார்டுகளை வரையறை செய்வது குறித்து உரிய முறையில் தெரிவித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து உரிய கருத்துக்களைப் பெற்ற பின்பு நேரடியாக தேர்தல் ஆணையமே வார்டுகளை வரையறை செய்ய வேண்டும் என்றும், உள்ளாட்சிகளில் சிறுபான்மையின மக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் வார்டுகளை வரையறை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply