உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி கடிதம்!

உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய  தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி கடிதம்!
mhj new
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழக சிறையில் வாடும் சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி  மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நான் (பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா) பின்வரும் கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளேன். அக்கடிதத்தில்:
“தமிழக சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்நாள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைவரையும் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 161ஐ பயன்படுத்தி விடுதலை செய்ய  வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கோரி வருகின்றன.
இக்கோரிக்கைகளின் அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவிக்கும் ஆயுட்கால சிறைவாசிகள் அனைவரையும், சட்ட வல்லுனர்களின் கருத்துகளைக் கேட்டு விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டமன்றப் பேரவையில் தாங்கள் அறிவித்தீர்கள்.
இச்சூழலில் சிறைவாசி ஜப்ரூ (எ) செய்யது ஜாபர் அஹமத் என்ற சிறைவாசியை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில் (HCP NO:1606 OF 2017) கடந்த 14.12.2017 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு “சிறைவாசி ஜப்ரூ (எ) செய்யது ஜாபர் அஹமதை விடுதலை செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது. எனினும் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் ஜாபர் அஹ்மதை விடுதலை செய்ய தமிழக அரசின் உள்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதே போன்ற நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பல ஆயுள் கைதிகள் இதற்கு முன்னர் விடுவிக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் வேறொரு வழக்கில் 76 வயதைக் கடந்த, 22 ஆண்டுகள் சிறையில் வாடும் கோவை சிறைவாசி பாஷா அவர்களையும் ஆறு வார காலத்திற்குள் விடுதலை செய்ய பரிசிலீக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது.
எனவே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இவர்கள் இருவரை விடுதலைச் செய்வதுடன், குற்ற நடைமுறைச் சட்டத்தின் 432வது பிரிவின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட மாநில அரசு, தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனைக் காலத்தை முற்றிலுமாகவோ, பகுதியாகவோ குறைப்பதற்கு மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும் 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு அதிகமான காலம் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள அனைத்துக் கைதிகளையும் அரசியலமைப்புச் சட்டம் 161வது பிரிவு மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.
மேலும் சிறுநீரக பாதிப்பு மட்டுமின்றி எஸ்.எல்.இ என்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு பல்வேறு வகையிலான உடல் உபாதைகளுக்கு உள்ளாகியுள்ள சிறைவாசி அபுதாஹிரையும் கருணை அடிப்படையில் உடனே விடுதலை செய்ய  தாங்கள் நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.”
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply