உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
22688113_1194579960686576_5440787670266251932_n
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
தமிழ் வழக்காடு மொழியாக அறிவிக்கப்படுமா? என்ற மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா அவர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரி, “தமிழகத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க இயலாது என்றும், உச்சநீதிமன்றம் தமிழை வழக்காடு மொழியாக ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் இது சாத்தியமில்லை” என்றும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
  மத்திய அமைச்சரின் இந்த  அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(2)ஆவது பிரிவின்படி உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அலகாபாத், பாட்னா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக இந்தி அறிவிக்கப் பட்டுள்ளது. இதே பாணியில் தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக அங்கீகரிக்க உச்சநீதிமன்றத்தைக் காரணம் காட்டி மோடி அரசு மறுத்திருப்பது அதன் தமிழ் விரோதப் போக்கை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
உண்மையிலேயே உச்சநீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மத்திய அரசு ஏற்று நடவடிக்கை எடுக்குமென்றால் உச்சநீதிமன்ற உத்தரவின் படி முதலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
மத்தியில் பாஜக அரசு அமைந்ததில் இருந்து ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை மொழிக் கொள்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் வெளிப்பாடு தான் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முட்டுக்கட்டையாக உள்ளது என மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது. இதன் மூலம் தமிழக அரசின் உரிமையை மீண்டும் மோடி அரசு பறித்து தமிழக மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு திரு. சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக சம்பந்தப்பட்ட மாநில மொழியை அறிவிப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்கத் தேவையில்லை என்றும் மத்திய அரசே முடிவெடுத்து குடியரசுத் தலைவர் மூலம் அறிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
தமிழக நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக அங்கீகரிக்கப்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply