உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு; மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!

1738 Views
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு; மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!
supreme
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழகத்தின் உயிர் நாடி பிரச்சினையாக இருக்கின்ற காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் இன்றைய தினத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவைச் சற்றும் கண்டுகொள்ளாமல், தமிழகத்திற்குத் துரோகம் இழைத்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்  காவிரியில் மேலாண்மை வாரியத்தை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய பாஜக அரசின் தமிழக விரோதப் போக்கை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏற்கெனவே உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட போது “இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இந்த உத்தரவைப் பிறப்பிக்க அதிகாரம் இல்லை” என்று கர்நாடகத்திற்கு ஆதரவாகத் தனது கருத்துக்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடுக்கப்பட்ட கெடுவிற்குப் பிறகும் அதை ஏற்க மறுப்பது தமிழகத்திற்கு மத்திய அரசு இழைக்கும் பச்சைத் துரோகமாகும்.
தமிழ்நாட்டு நலனில் மத்திய பாஜகவிற்கு உள்ள அக்கறை இன்மையினால் தான் தமிழக அனைத்துக் கட்சியினரைப் பிரதமர் மோடி சந்திக்க மறுத்து வருகிறார். பிரதமர் மோடியின் தமிழக விரோதப் போக்கை நன்கு உணர்ந்த பிறகும் தமிழக அரசு மத்திய அரசிற்கு உரிய அழுத்தத்தைக் கொடுக்காமல் காலந்தாழ்த்தியதால் தான்  உச்சநீதிமன்றம் விடுத்த கெடுவிற்குப் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு விளையாட்டு காட்டி வருகிறது.
எனவே, தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, காவிரி மேலாண்மை விவகாரத்தில் துரோகம் இழைத்த மத்திய அரசுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் அனைத்துக் கட்சியின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியாவது தமிழகத்தின் உரிமையை வென்றெடுக்க உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply