இனயம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

1398 Views
மீனவ மக்களைப் பெரிதும் பாதிக்கும் இனயம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!
MHJ
மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், இனயம் மீனவ கிராமத்தில் பலகோடி மதிப்பீட்டில் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த துறைமுகத் திட்ட அறிக்கையில் கடற்கரைப் பகுதியிலிருந்து கடலின் உட்புறமாக 5 கிலோ மீட்டர் தொலைவில் துவக்கச்சுவரும், 6.5 கிலோ மீட்டர் அலைத் தாக்க தடுப்புச் சுவரும், நங்கூரம் பாய்ச்சுவதற்குத் தேவையான 20 மீட்டர் ஆழம் என சுமார் 390 ஹெக்டர் ஏக்கர் நிலப்பரப்பில் மணல் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட மீனவர்கள் பொதுவாக பாரம்பரிய முறைப்படி கரையிலிருந்து 5 முதல் 10 வரையிலான கடல்மைல் தொலைவுக்குள் மீன்பிடித் தொழிலை செய்துவருபவர்கள். புதிய வர்த்தக துறைமுகத்திற்கு மணல் நிரப்பப்படும்போது பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும்.
இந்தப் பன்னாட்டு முனையத்திற்குத் தேவையான நான்குவழிச் சாலை மற்றும் ரயில் பாதைக்குத் தேவையான நிலங்கள் அனைத்தும் ஏழை மீனவர்களின் குடியிருப்பு வீடுகளும், விவசாயிகள் நிலங்களும் ஆர்ஜிதம் செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேங்காய்பட்டணம் முதல் குளச்சல் வரையில் வாழும் சுமார் 14 ஆயிரம் மீனவ குடும்பத்தைச் சேர்ந்த 70,000 பேர் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு சிதறடிக்கப்படுவார்கள். மேலும் கடல் சார்ந்த சங்கு, சிப்பி தயாரிக்கும் தொழில்களும் முடங்கும் அபாயம் உள்ளது.
எனவே, பல்வேறு வகையில் மீனவ மக்களை பாதிக்கும் இந்த இனயம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இவண்
(எம்.எச்.ஜவாஹிருல்லா)
Leave a Reply