இணைய வழியில் பாடமும், தேர்வும் எளிய மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

342 Views

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர்.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை.

கொரோனா தீநுண்மி ஏற்படுத்தியுள்ள உலகளாவியத் தாக்குதலின் மோசமான எதிர்வினைகளை அடித்தட்டு நிலையில் உள்ள ஏழை, எளிய விளிம்புநிலை மக்களே அதிகம் எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு அரணாக நிற்க வேண்டிய அரசு, அதற்கு முரணாகச் செயல்பட்டு வருவது வேதனைக்குரியது.

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய ஊரடங்கு காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் பாடங்களை இணைய வழியில் மாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்றும், கல்லூரி மறுதிறப்புக்குப் பிறகு மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதை பல்கலைகழக மானிய ஆணையமும் (யுஜிசி) மற்றும் அனைத்திந்திய தொழில் நுட்ப கல்வி குழுமம் (ஏஐசிடிஈ) ஆகிய உயர்கல்வி அமைப்புகள் அப்படியே ஏற்று வழிமொழிந்துள்ளன.

இணையதளம் வழியே பாடங்களை நடத்துவதும், எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்வுகளுக்குத் தயாராவதும் மேல்தட்டு மாணவர்களுக்குச் சாத்தியபடலாம். முதல் தலைமுறை மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு இது சாத்தியமில்லை.

இத்தகைய முறையில் பாடம் நடத்திவிட்டு, தேர்வுகளை வைத்தால் அது மாணவர்களிடையே நியாயமான சமவாய்ப்புள்ளத் தேர்வாக அமையாது. அடித்தட்டு மாணவர்கள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

சேவைத்துறையை வணிகமயமாக்க வேண்டும் என்ற உலக வர்த்தக அமைப்பின் நிபந்தனையை நிறைவேற்றுதற்கான முதல் அடியை அரசு இதன் மூலம் எடுத்து வைத்துள்ளது. எதிர்காலத்தில் கல்வி நிறுவனங்களை முற்றாக ஒழிப்பதற்கும், ஏழை, எளிய மக்களுக்குக் கல்வியை முற்றாக மறுப்பதற்குமே இத்தகைய நடவடிக்கைகள் முன்மாதிரியாக அமையும்.

எனவே, இணைய வழியில் பாடம் நடத்தித் தேர்வு வைக்கும் முடிவை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.
இந்த விடுமுறைக் காலத்தைப் பயனுடையதாக ஆக்கிக் கொள்ள அறம் சார்ந்த விழுமியங்களும், தேர்வுக்கு அப்பாற்பட்ட ஆக்கத்திறன் சார்ந்த பொதுக் கல்வியையும் மாணவர்களுக்கு அளிக்கலாம்.

ஆனால் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வுக்குரிய பாடங்களை இணையம் வழியே நடத்தி, மறு திறப்புக்குப் பின் தேர்வு வைப்பது மிகப்பெரிய அநீதியாக அமையும். மத்திய, மாநில அரசுகள் இதைக் கைவிட்டுவிட்டு மக்கள் நலம் சார்ந்த கல்வியாளர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும் எனக் கோருகிறேன்.

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
7 வடமரைக்காயர் தெரு
சென்னை 600 001

Leave a Reply