அரியலூர் நந்தினி கொடூரக் கொலை குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

1896 Views
அரியலூர் நந்தினி கொடூரக் கொலை குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!
nandhini-_ariyalur
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூர் காலணியைச் சேர்ந்த நந்தினி என்ற தலித் சிறுமி கொடூரமாக கூட்டுப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்தப் படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சிறுமி நந்தினி கடந்த டிசம்பர் 26 அன்று காணாமல் போனதாக அவரது தாயார் காவல்துறையில் புகார் அளித்தும் காவல்துறையினர் அப்புகாரை அலட்சியப்படுத்தவே,  ஜனவரி 14 அன்று கீழமாளிகை கிராமத்தில் ஒரு கிணற்றிலிருந்து நிர்வாண நிலையில், உடல் சிதைத்து கொல்லப்பட்டு, அழுகிய நிலையில் சிறுமி நந்தினியின் சடலம்  மீட்கப்பட்டது. “மனிதனால்” இதுபோன்று கொடூரமான முறையில் கொலை செய்ய இயலுமா? என்று நினைக்கும் அளவிற்கு இக்கொலை நடத்தப்பட்டுள்ளது.
நந்தினியைக் காதலித்து, கர்ப்பமாக்கி நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்ச்சி செய்த பின்பு கொலை செய்து தப்பித்த இந்து முன்ணியின் ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் என்பவர் மீது புகார் அளித்தபின்பும், சரியான முறையில் விசாரணை நடத்தாமல் மணிகண்டனைக் காப்பாற்றும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுப்பட்டுள்ளது என்பது பெரும் அநாகரீக செயலாகும். தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் தந்த அழுத்தத்தின் விளைவாக குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் இதுபோன்ற கூட்டு பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்கள் நடைபெற்ற வந்த நிலையில் தமிழகத்திலும் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனம் தலையெடுத்துள்ளது. கடந்த 2002ல் குஜராத் இனப்படுகொலையின்போது கவுசர் பீ போன்று எண்ணற்ற முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அதே கொடுமைதான் தற்போது நந்தினிக்கு இழைக்கப்பட்டுள்ளது.
இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீதும், அதற்குத் துணை நிற்பவர்கள் மீதும் கடுமையான சட்டப் பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் நந்தினி கொலைச் சம்பவத்தில் அலட்சியமும், மெத்தனபோக்கும் காட்டிய சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன் 
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply