அங்கன்வாடி மையங்களை மூட மத்திய அரசு திட்டம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

அங்கன்வாடி மையங்களை மூட மத்திய அரசு திட்டம்!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
anganwadi-c-26-1498462550
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
இந்தியாவில் உள்ள குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு  அங்கன்வாடி மையங்கள் மூலமாக ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு  வருகின்றது.
பத்தொன்பது கோடி குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து அளித்து உலகிலேயே முதன்மையாக செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் மாற்றங்கள் செய்து அத்திட்டத்தினை தடம்புரளச் செய்ய மத்திய அரசின் நிதி ஆயோக் தீர்மானித்துள்ளது.
 அங்கன்வாடியில் வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகளுக்குப் பதிலாக மாதம் ரூ.180ஐ பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த நிதி ஆயோக் மத்திய அரசிற்குப் பரிந்துரைத்துள்ளது. நிதி ஆயோக்கின் இந்த செயலை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது.
அரசின் சார்பில் வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் அனைத்து மொத்த விலையில் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதால் நாளொன்றுக்கு ஒரு பயனாளிக்கு ரூ.6 மட்டுமே செலவாகிறது. அதன்அடிப்படையில் மாதம் ரூ.180 வழங்குவது என நிதி ஆயோக் மத்திய அரசிற்கு பரிந்துரைத்துள்ளது என்பது ஏற்றுக்கொள்ள இயலாதது. ரூ.180ல் மூன்று நாட்களுக்கான ஊட்டச்சத்து உணவு மட்டுமே பயனாளிகளால் வாங்கப்படுமே தவிர அதனை வைத்து மாதம் முழுவதும் ஊட்டச்சத்து உணவைப் பெற இயலாது.
மேலும் சமைத்த சூடான ஊட்டச்சத்து உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கவே அங்கன்வாடி மையங்களில் பதப்படுத்தப்பட்ட மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை வாங்கி வழங்காமல், அதே பகுதியில் வசிக்கும் பெண்களை பணியமர்த்தி  உணவைச் சமைத்து சூடாக வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, மத்திய அரசு அங்கன்வாடி தொடர்பான நிதி ஆயோக்கின் பரிந்துரைகளை நிராகரித்து, அங்கன்வாடி மையங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
 அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply