அகில இந்திய வானொலியின் திருச்சி செய்திப் பிரிவை மூடும் முடிவைக் கைவிடவேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

அகில இந்திய வானொலியின் திருச்சி செய்திப் பிரிவை மூடும் முடிவைக் கைவிடவேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!
mhj1 (2)
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
அகில இந்திய வானொலியின் திருச்சி மண்டல செய்திப் பிரிவை மத்திய அரசு மூட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தென்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.
கடந்த 1981ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் திருச்சி மண்டல செய்திப் பிரிவு பல்வேறு தகவல்களை தென் மாவட்டங்கள் உட்பட தமிழக மக்களுக்கு அளித்து வருகின்றது. மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்த தகவல்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான திட்டங்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் நேயர்களுக்கு வழங்குவதில் திருச்சி செய்திப்பிரிவு தனி இடத்தைப் பிடித்துள்ளது.
திருச்சி மண்டல செய்திப் பிரிவால் தினமும் பகல் 1:45 மணிக்கு “மாநில செய்திகள்” என்ற தலைப்பில் ஒளிபரப்பாகும் செய்திகள் நேயர்களின் மனங்களைக் கவர்ந்த காரணத்தினால் கடந்த 2006ஆம் ஆண்டு அது “தேசிய ஆகாஷ்வானி” விருதைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கை சீற்றத்தால் மின்சாரம் துண்டிக்கப்படும் போது வெறும் பேட்டரியில் இயங்கி மக்களுக்கு உரிய தகவல்களை அளித்து வருவதில் வானொலிக்கு ஈடாக இதுவரை எந்த தகவல் தொடர்பு சாதனமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
திருச்சி மண்டல செய்திப் பிரிவு நிரந்தரமாக மூடப்பட்டால் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைத் தொடர்புடைய விவசாய மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல செய்திகள் பாமர மக்களுக்குச் சென்றடையாது என்பது வருந்தத்தக்கது.
எனவே, தென்மாவட்ட கிராமப்புற மக்களின் செய்தித் தொடர்பு சாதனமான வானொலியின் திருச்சி மண்டல செய்திப் பிரிவை மூடும் முடிவை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply